பெரும்பாலான பொதுமக்களைப் பொறுத்தவரை, 'தலைவர்' என்பது ரொம்பப் பெரிய பதவி, பொறுப்பு, கௌரவம். மிகச் சிலர்மட்டும்மே அதற்குத் தகுதியானவர்கள், மற்றவர்கள் எல்லோரும் கீழே கை கட்டி நின்று வேடிக்கை பார்க்கவேண்டியதுதான் என்ற எண்ணம் இருக்கிறது. ஆனால் அப்படியல்ல, எல்லோரிடமும் அந்த குணங்கள் இருக்கின்றன. அவற்றை வளர்த்தால் போதும்.
ஒருவர் எப்படித் திடுதிப்பென்று தலைவராக முடியும்? அதற்கு தேவையான பண்புகளை எப்படி வளர்த்துக்கொள்வது?
இந்தக் கேள்விக்குப் பதில் சொல்லுவிதமாக 'வேர் ஹேவ் ஆல் தி லீடர்ஸ் கான்?' (Where Have All The Leaders Gone?') என்ற சுவாரஸ்யமான புத்தகம் வெளியாகியிருக்கிறது. இதை எழுதியிருப்பவர்கள், பிரபல மேலாண்மை நிபுணர், உலகப் புகழ்ப் பெற்ற எழுத்தாளர் லீ அயகோக்கா மற்றும் கேதரின் விட்னி.
'அநாவசியமா தலைவர்களைத் தேடித் போய்க்கிட்டிருக்காதீங்க, கொஞ்சம் முயற்சி செஞ்சா நீங்களே தலைவராயிடலாம் என்கிறார்கள். இதற்கு 9 'சி' தேவை என்கிறார்கள். 9 'சி' என்றதும் நம்ம ஊர் ஸ்டைலில் 9 கோடி என்று நினைத்துவிட வேண்டாம். '9சி' என்பது 'சி' என்ற ஆங்கில எழுத்தில் தொடங்கும் ஒன்பது முக்கியமான குணங்களைக் குறிக்கிறது.
1. Curiosity - ஆர்வம்
ஒரு தலைவன் எந்தப் புது விஷயத்தையும் கற்றுக்கொள்கிற ஆர்வத்தோடு இருக்கவேண்டும். மற்றவர்கள் செம்மறி ஆடுகளைப்போல் ஒரே பாதையில் நடந்து சென்றால்கூட, நாம் மட்டும் சுற்றியுள்ள மற்ற பாதைகளைக் கண்காணிக்க வேண்டும், 'இந்த பக்கம் போனால் என்ன?' என்று யோசிக்க வேண்டும், அந்த ஆர்வம்தான் நமது முன்னேற்றத்துக்கு சிவப்புக் கம்பளம் விரிக்கிறது!
2. Creativity - படைப்புத்திறன் / புதுமைச் சிந்தனை
தலைவர்கள் யாரும் நடக்காத பாதையில் நடந்தால்மட்டும் போதாது, யாரும் செய்யாத ஒன்றைச் செய்கிற திறமையும் படைப்புணர்ச்சியும் வேண்டும். பிறர் கண்ணில் படாத விஷயங்கள் கூட, இவர்களுடைய மனக்கண்ணில் தோன்றவேண்டும், அரைத்த மாவையே அரைக்கிற குணம் பயன்படாது!
3. Communication - தகவல் தொடர்பு
ஒரு விஷயம் கவனித்தீர்களா? பெரிய தலைவர்கள் எல்லாம் பிரமாதமான பேச்சாளர்களாக இருப்பார்கள். அதற்காக நாம் மேடையேறி முழங்கவேண்டும் என்று அவசியம் இல்லை, நமது குடும்ப உறுப்பினர்கள், அலுவலகத் தோழர்கள், நமக்குக் கீழே வேலை செய்பவர்களுக்கு எதையும் சரியானமுறையில் தெளிவாக விளக்கிச் சொல்லி அவர்களுடைய ஒத்துழைப்பை பெறுகிற திறன் வேண்டும்.
4. Character - ஒழுக்கம்
கையில் ஒரு பதவி, பொறுப்பு வந்துவிட்டால் நம் இஷ்டம்போல் தப்புச் செய்யலாம் என்று நினைப்பது மனித இயல்பு. ஆனால் தலைவர்கள் தப்பு செய்யக்கூடாது.
5. Courage - தைரியம்
சிலர் நன்கு வாய் கிழியப் பேசுவார்கள். ஆனால், செயல் என்று வந்துவிட்டால் ஒதுங்கி நிற்பார்கள். அவர்களால் எப்போது தலைவர்களாக முடியாது.
6. Conviction - உறுதி
ஒரு தலைவரின் பாதையில் ஏகப்பட்ட குருக்கிடல்கள் வரும். அப்போதெல்லாம் 'போதுமடா சாமி' என்று திரும்பிச் செல்லாமல் முன்னேறுபவர்கள்தாம் தலைவர்கள்.
7. Charsima - ஈர்ப்பு / கவர்ச்சிகரமான ஆளுமை
ஈர்ப்பு என்று சொல்வது வெறும் முக அழகுமட்டுமல்ல, அடுத்தவர்கள்மீது வெளிக்காட்டும் அக்கறை, அவர்கள் பேசுவதைப் புரிந்துகொள்ளும் தன்மை, அன்பாகப் பேசும் விதம் போன்றவை எல்லாமாகச் சேர்த்து ஒரு தலைவரைத் தீர்மானிக்கிறது
8. Competence - திறமை / தகுதி
நாம் எந்தத் துறையில் இருக்கிறோமோ, அதுபற்றிய ஞானம் ஒரு தலைவருக்கு மிக அவசியம். அது தெரியாமல் மற்ற குணங்களை மட்டும் வைத்துத் தலைவர்களானவர்கள் ரொம்ப நாள் நீடித்து நிற்கமுடியாது.
9. Common Sense - யதார்த்த அறிவு
எப்பேர்பட்ட தலைவரும், அந்தரத்தில் கொடிகட்டமுடியாது. எத்தனை சிறப்பான லட்சியக் கனவுகளைக் கொண்டிருந்தாலும், எதார்த்தத்தைப் புரிந்து, தரையில் கால் பதித்து நிற்கிற தலைவர்கள்தான் மிகப் பெரிய வெற்றியடைகிறார்கள்.
இந்த 9 சியில் உங்க ஸ்கோர் என்ன? எங்கெல்லாம் முன்னேற்றம் தேவைபடுகிறது? சட்டென்று ஒரு கணக்குப் போட்டுப் பார்த்துவிட்டுத் தயாராகிக்கொள்ளுங்கள், நீங்களும் தலைவராகலாம்.
thanks
http://ularuvaayan.blogspot.com/2010/08/9.html